வெள்ளி, 14 அக்டோபர், 2016

பெண்கள் வீட்டு விலக்காக இருக்கும் நாட்களில் தெய்வத்தை வணங்கலாமா ? கூடாதா ?
மாதவிலக்கு என்பதை ஒரு  குறையாக அகத்தியர் சித்தரிக்கவில்லை. பெண்களுக்கு, உடல் அசதி மிகவே இருக்கும், மேலும் நோய் வாய்ப்படுகிற சாத்தியக் கூறுகள் கூடுதல் என்பதால், அயர்வாக இருக்க உபதேசிக்கிறார். அவர் வார்த்தைகளை கீழே தருகிறேன்.
இறைவன் அருளால் மூன்று அல்ல, நாங்கள் கூட சப்த தினங்கள் வரை அயர்வாக இருக்கட்டும் என்றுதான் கூறியிருக்கிறோம். தேகம் சோர்ந்து இருக்கும் தருணம் யாராலும் இயல்பாக செயல்பட முடியாது. இந்த அடிப்படையில் எழுந்த நியதிதான் அது. அதற்காக அது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படுவதை நாங்கள் ஒருபொழுதும் ஆதரிப்பதில்லை. இருந்தாலும் கூட இது போன்ற தருணங்களிலே இப்பொழுது பணிக்குக் கூட பெண்கள் செல்கிறார்கள். அப்படிப் பார்த்தால் எமது நோக்கிலே சப்த தினங்கள் அவர்கள் உயர்வான ஊட்டச்சத்து மிகுந்த அன்னத்தை ஏற்று அயர்வாக இருக்க வேண்டுமே தவிர, எந்தப் பணியும் செய்யக்கூடாது. ஆனால் அது நடைமுறை சாத்தியம் அல்ல என்பது எமக்கும் தெரியும். இருந்தாலும் கூட இஃதொப்ப நிலையிலே வேறு சில, நன்றாக கவனிக்க வேண்டும், மனிதர்கள் கூறுகின்ற காரணம் அல்ல. நாங்கள் வேறு சில காரணங்கள் அடிப்படையில் ஆலயம் செல்ல வேண்டாம் என்றுதான் கூறியிருக்கிறோம். அது குறித்து பின்னர் தக்க காலத்தில் தேவைப்படும் பெண்களுக்கு நாங்கள் விளக்க வாக்கைக் கூறுவோம்.

அப்படியென்றால் வீட்டில் பூஜை செய்யலாமா ?

அவரவர்கள் இடத்திலே மானசீக பூஜை கூட தாராளமாக செய்யலாம். வாய்ப்ப்பு உள்ளவர்கள் நன்றாகக் கூட புற பூஜையும் செய்யலாம். நாங்கள் குற்றம் என்றோ, தோஷம் என்றோ கூறவில்லையப்பா. ஆயிரம் மன அழுக்குகளோடு ஆலயம் செல்கின்ற மனிதன் புற அழுக்கைப் பற்றிக் கூறுவதில் என்ன பொருள் இருக்கிறது

இறைவன் அருளால் ஒவ்வொரு மனிதனையும் "புத்தியை தீட்டு, அறிவை தீட்டு, ஞானத்தை தீட்டு" என்றுதான் நாங்கள் கூறுவோம். சுத்தமாக இருக்கும் நிலையில் நாங்கள் புறசுத்தத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இருந்தாலும் கூட, இன்னவள் கூறியது போல் மாதாந்திர விலக்கு என்பது பெண்களுக்கு அதிக அளவு உடல் சோர்வை தரக்கூடியது. அந்த நிலையில் பெண்கள் ஓய்வாக இருப்பது அவசியம் என்பதால், ஓய்வாக இருக்க பணிக்கப்பட்டார்கள். இதை ஒதுக்கி வைப்பதாக எண்ணிவிடுதல் கூடாது. அதற்காக ஓய்வாக இருந்துகொண்டு மானசீகமாக இறைவனை வணங்கக் கூடாது என்பதில்லை. இகுதொப்ப, மனரீதியாக ஒரு மனிதன் பரிசுத்தமாக இருக்க வேண்டும். உடல் ரீதியாக பரிசுத்தமாக இருந்தால், அது புத்துணர்ச்சியைத் தரும் என்பதால், உடல், உள்ளம் இரண்டுமே சுத்தமாக இருப்பது, மிக, மிக அவசியமாகிறது. இன்னொன்றை மனிதன் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இறைவனின் படைப்புகளில் எதையும் குறையாக நாங்கள் பார்ப்பதில்லை. இருந்தாலும், உடல் நலம் கருதியும், உடல் சோர்வை கருதியும்தான் சிலவற்றை வகுத்து தந்திருக்கிறோம். இதைக் குற்றமாகவோ, தோஷமாகவோ பார்க்காமல், உடல் நலம் கருதி கூறப்பட்டது, என்று எடுத்துக் கொள்வது ஏற்புடையதாக இருக்கும்."


கார்த்திகேயன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக