வெள்ளி, 14 அக்டோபர், 2016

பெண்கள் வீட்டு விலக்காக இருக்கும் நாட்களில் தெய்வத்தை வணங்கலாமா ? கூடாதா ?
மாதவிலக்கு என்பதை ஒரு  குறையாக அகத்தியர் சித்தரிக்கவில்லை. பெண்களுக்கு, உடல் அசதி மிகவே இருக்கும், மேலும் நோய் வாய்ப்படுகிற சாத்தியக் கூறுகள் கூடுதல் என்பதால், அயர்வாக இருக்க உபதேசிக்கிறார். அவர் வார்த்தைகளை கீழே தருகிறேன்.
இறைவன் அருளால் மூன்று அல்ல, நாங்கள் கூட சப்த தினங்கள் வரை அயர்வாக இருக்கட்டும் என்றுதான் கூறியிருக்கிறோம். தேகம் சோர்ந்து இருக்கும் தருணம் யாராலும் இயல்பாக செயல்பட முடியாது. இந்த அடிப்படையில் எழுந்த நியதிதான் அது. அதற்காக அது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படுவதை நாங்கள் ஒருபொழுதும் ஆதரிப்பதில்லை. இருந்தாலும் கூட இது போன்ற தருணங்களிலே இப்பொழுது பணிக்குக் கூட பெண்கள் செல்கிறார்கள். அப்படிப் பார்த்தால் எமது நோக்கிலே சப்த தினங்கள் அவர்கள் உயர்வான ஊட்டச்சத்து மிகுந்த அன்னத்தை ஏற்று அயர்வாக இருக்க வேண்டுமே தவிர, எந்தப் பணியும் செய்யக்கூடாது. ஆனால் அது நடைமுறை சாத்தியம் அல்ல என்பது எமக்கும் தெரியும். இருந்தாலும் கூட இஃதொப்ப நிலையிலே வேறு சில, நன்றாக கவனிக்க வேண்டும், மனிதர்கள் கூறுகின்ற காரணம் அல்ல. நாங்கள் வேறு சில காரணங்கள் அடிப்படையில் ஆலயம் செல்ல வேண்டாம் என்றுதான் கூறியிருக்கிறோம். அது குறித்து பின்னர் தக்க காலத்தில் தேவைப்படும் பெண்களுக்கு நாங்கள் விளக்க வாக்கைக் கூறுவோம்.

அப்படியென்றால் வீட்டில் பூஜை செய்யலாமா ?

அவரவர்கள் இடத்திலே மானசீக பூஜை கூட தாராளமாக செய்யலாம். வாய்ப்ப்பு உள்ளவர்கள் நன்றாகக் கூட புற பூஜையும் செய்யலாம். நாங்கள் குற்றம் என்றோ, தோஷம் என்றோ கூறவில்லையப்பா. ஆயிரம் மன அழுக்குகளோடு ஆலயம் செல்கின்ற மனிதன் புற அழுக்கைப் பற்றிக் கூறுவதில் என்ன பொருள் இருக்கிறது

இறைவன் அருளால் ஒவ்வொரு மனிதனையும் "புத்தியை தீட்டு, அறிவை தீட்டு, ஞானத்தை தீட்டு" என்றுதான் நாங்கள் கூறுவோம். சுத்தமாக இருக்கும் நிலையில் நாங்கள் புறசுத்தத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இருந்தாலும் கூட, இன்னவள் கூறியது போல் மாதாந்திர விலக்கு என்பது பெண்களுக்கு அதிக அளவு உடல் சோர்வை தரக்கூடியது. அந்த நிலையில் பெண்கள் ஓய்வாக இருப்பது அவசியம் என்பதால், ஓய்வாக இருக்க பணிக்கப்பட்டார்கள். இதை ஒதுக்கி வைப்பதாக எண்ணிவிடுதல் கூடாது. அதற்காக ஓய்வாக இருந்துகொண்டு மானசீகமாக இறைவனை வணங்கக் கூடாது என்பதில்லை. இகுதொப்ப, மனரீதியாக ஒரு மனிதன் பரிசுத்தமாக இருக்க வேண்டும். உடல் ரீதியாக பரிசுத்தமாக இருந்தால், அது புத்துணர்ச்சியைத் தரும் என்பதால், உடல், உள்ளம் இரண்டுமே சுத்தமாக இருப்பது, மிக, மிக அவசியமாகிறது. இன்னொன்றை மனிதன் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இறைவனின் படைப்புகளில் எதையும் குறையாக நாங்கள் பார்ப்பதில்லை. இருந்தாலும், உடல் நலம் கருதியும், உடல் சோர்வை கருதியும்தான் சிலவற்றை வகுத்து தந்திருக்கிறோம். இதைக் குற்றமாகவோ, தோஷமாகவோ பார்க்காமல், உடல் நலம் கருதி கூறப்பட்டது, என்று எடுத்துக் கொள்வது ஏற்புடையதாக இருக்கும்."


கார்த்திகேயன்!
தீட்டு என்றால் என்ன? இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் யாவை?
 ‘தீட்டு’ என்கிற சொல் புரிந்துகொள்ளப்படாமலேயே காலங்காலமாக பெரும்பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது. இது குறித்த உண்மையான அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை. இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் குறித்து இந்தப் பதிவு தெளிவுபடுத்தும் என நம்பலாம்.
தீட்டு என்பது என்ன?
இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது!
தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது. தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள். தீட்டுப் பட்டால் துடைத்து விடும், தீட்டுக் கூடாது என்பார்கள்.
ஆண், பெண் கலந்தாலும் தீட்டு, குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு, பெண்கள் மாதவிடாயும் தீட்டு, இறந்தாலும் தீட்டு! இப்படிப் பார்த்தால்,தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே! அதனால் தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர் வைத்துப் பிணத்தைத் தொட்டால் தீட்டு என்பார்கள்.
தீட்டுடைய இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்? சிந்தித்துப் பாருங்கள். இதுவல்ல உண்மையான தீட்டு. இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்கு. இறைவனை பெயரைச் சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்பொழுது தான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத்தான் இவற்றைச் சொன்னார்கள்.
தீட்டு என்பது வேறு, அவை காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம் என்னும் பஞ்சமா பாதங்கள்!
1. காமத் தீட்டு:
காமம் என்பது ஆசை. நாம் எந்தப்பொருள் மீதாகிலும் ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம். நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே ஞாபகமாக இருப்போம். அதற்காகவே முயற்சிச் செய்வதும், அலைவதுமாக இருப்போம். அந்தப் பொருள் கிடைத்து விட்டால், மனத்தில் சந்தோசம் உண்டாகும். இல்லையென்றால் மனத்தில் சதா வேதனை ஏற்படும். இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதை தீண்டாதே என்றார்கள்.
2. குரோதத் தீட்டு:
குரோதம் என்பது கோபம். யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால், முன்னே பின்னே பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன. சிலர் கொலை செய்துவிட்டு ஆயுள்பூராகவும் துன்பம் அனுபவிப்பார்கள். சிலர் தூக்கில் இடப்படுவார்கள். கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை. கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிப்பேர்,
கோபம் எழும் பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து மடிகின்றன. ஆயுளும் குறைந்து விடுகிறது. கோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள். இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர். குரோதம் என்னும் கோபமே இரண்டாவது தீட்டு.
3. லோபத் தீட்டு:
லோபம் என்பது சுயநலம், பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும், இரக்கம் என்பதே இல்லாமலும், சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும், கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும், தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய நோக்கமும், வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுடன் பாதுகாப்பதும் எல்லாம் சுயநல வேகமே. இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. அதனால் தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பார்கள் இது லோபம் என்னும் மூன்றாவது தீட்டு.
4. மதத் தீட்டு:
மதம் என்பது கர்வம் (ஆணவம்) ஒருவரையும் மதிக்காது மனதையோடு இருப்பது இது. எதையும் தானே சாதிக்க முடியும் என்ற கர்வமும் இது. தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் இது. ஆணவ நெறியால் யாவரையும் துன்பப் படுத்தித் தான் மகிழ்ச்சி அடைவதும் இது. இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால் தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்பர். அதைத் தீண்டாதே என்பர். கர்வமாகிய மதமே நான்காவது தீட்டு.
5. மாற்சரியத் தீட்டு:
மாற்சரியம் என்பது பொறாமை. பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் வேதனைப்படுவது இது. எந்த நேரமும் நாம் நல்லபடியில்லையே என்று தன்னையே நொந்து கொள்வதும் இது. எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள் எப்பொழுது கஷ்டப் படுவார்கள், எப்பொழுது செத்துப் போவார்கள் என்பதும் இது.
தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் சாகக் கூடாது என்பதே இவர்கள் எண்ணம். பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள். தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள். இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால் தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றனர். இதுதான் ஐந்தாவது தீட்டு.

இவை ஐந்தும் மாபெரும் தீட்டுகள். இந்தத் தீட்டுக்களையுடைவர்கள் இறைவனை வழிபட முடியாது. இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது. 
மாதா,பிதா,குரு,தெய்வம் இவர்களில் யார் உயர்ந்த நெறி வாழ்க்கையை தரக்கூடியவர்???

எல்லோரும் வரிசைப்படுத்தி முதலில் தாய், அப்புறம் தந்தை, அதன் பின் குரு, அதன் பின் தெய்வம் என்பார்,

முதலில் வான்மீகரை சந்திப்போம்,

இராமாயண காப்பியம் இந்திய மொழிகள் பலவற்றில் பலரால் இயற்றப்பட்டிருந்தாலும், அவைகளுக்கெல்லாம் மூலநூலாகக் கருதப்படுவது வான்மீகி முனிவரின் மூலநூலான இராமாயணம்தான். நாரத முனிவரின் அனுக்கிரகத்தினால் பிரம்ம ரிஷியாக ஆனவர் வான்மீகி. இராமபிரானும் சீதையும் வாழ்ந்த நாளிலேயே வாழ்ந்தவர் வான்மீகி என்பதால் இவரது இராமாயணம் காப்பியமானது. இராமாயணத்தையும் இந்தக் காப்பிய நாயகர் நாயகியான இராமன் சீதையைப் பற்றிக் கேள்விப்பட்டிராத மனிதரே இமயம் தொடங்கி குமரி வரையிலான நம் பாரத நாட்டில் இருக்க முடியாது. இராமபிரான் பிறந்த நாளை இப்போதும் ஸ்ரீ ராம நவமி என்று கொண்டாடுகிறோம். ஆங்காங்கே ஆலயங்களிலும், மடாலயங்களிலும் இராம காப்பியத்தைப் புலவர்களும், பாகவதர்களும் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை முறை கேட்டாலும் அவற்றைத் திரும்பத் திரும்ப கேட்கும் பழக்கம் நம் மக்களிடையே இருந்து வருகிறது. இராமனுடைய பயணம் என்பதே இராம அயணம் என்று சொல்கிறோம். வான்மீகி இராமாயணத்தை வடமொழியில் இயற்றியிருக்கிறார். கவிதை வடிவில்தான் நம் நாட்டுக் காப்பியங்கள் எல்லா மொழிகளிலும் சிறப்பாக இயற்றப்பட்டிருக்கின்றன, இராமாயணமும் அதற்கு விதிவிலக்கல்ல. பாரதத் திருநாட்டின் தலைசிறந்த காப்பியங்களில் ஒன்றான இராமாயணம்தான் முதன் முதல் இப்படி வடமொழியில் இயற்றப்பட்ட நூல் என்பதால் இதனை 'ஆதி காவியம்' என்றும், வான்மீகியை ஆதிகவி என்றும் அழைக்கிறோம். இசையோடு பாடக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருப்பது இராமாயணம். குயில் கூவுவதை நாம் அறிவோம். இராமாயணத்தை இசையோடு கூடி பாடும்போது குயிலின் குரல் நமக்குக் கேட்கும் வகையில் பாடல்கள் அமைந்துள்ளன. இராமாயணத்தைப் படிக்கத் துவங்குவோர், அதன் ஆதிகவியான வான்மீகியை வணங்கிவிட்டுத்தான் படிக்கத் துவங்குகின்றனர். வடமொழியில் வான்மீகம் என்றால் கரையான்  புற்று என்று பொருள்படும். தான் தவமியற்ற ஓரிடத்தில் உட்கார்ந்து தியானத்தில் இருந்தபோது அவரைச் சுற்றி கரையான் புற்று எழுப்ப அதனுள் இருந்த தவமியற்றியதால் இவருக்கு அந்தப் பெயர் வந்தது என்பர். வான்மீகி அந்த கரையான் புற்றினின்றும் எப்படி வெளிப்போந்தார் என்பதே ஒரு சுவாரசியமான வரலாறு. இராம பிரான் காலத்தில் வாழ்ந்தவர் வான்மீகி என்பதைப் பார்த்தோம். அவருடைய காலம் திரேதா யுகம் என்பர். அப்போது எங்கும் அடர்ந்த காடுகளும், அந்தக் காடுகளினூடே கங்கை நதியும் இருந்தன. அந்தக் காட்டின் கங்கைக் கரையோரம் பல தவசிகள் வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஒருவர் பிரசேதசர். அவருடைய புதல்வன் இரத்னாகரன். இந்த மகன் இளம் வயதினனாய் இருந்தபோது ஒரு நாள் காட்டின் உட்பகுதிக்குள் செல்கிறான். அங்கு இவன் விளையாடிக் கொண்டிருந்த போது வழிதவறிப் போய் பயந்து அழத் தொடங்கினான். அப்போது காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த ஒரு வேடன் அங்கு வந்தான். காட்டில் அழுதுகொண்டிருந்த அந்த அழகிய குழந்தையை தனக்கு பிள்ளை இல்லை என்பதால் அந்த வேடன் குழந்தையைத் தன்னுடன் எடுத்துச் சென்றான். குழந்தையைக் காணாமல் அவன் தந்தை குழந்தையைத் தேடத் தொடங்கினார். எங்கும் தேடியும் அவன் கிடைக்காததால் அவனை ஏதோ மிருகம் அடித்துச் சாப்பிட்டுவிட்டது என்று பெற்றோர் எண்ணி மிகுந்த வருத்தமடைந்து கதறினர். குழந்தையை எடுத்துச் சென்ற வேடன் குழந்தையைத் தன் மனைவியிடம் கொடுத்து அருமை பெருமையாக அதனை வளர்த்தனர். குழந்தை ரத்னாகரன் வேடர் தம்பதியினரின் அன்பில் தன் சொந்த பெற்றோரை மறந்தான். வேட்டுவரிடையே வளர்ந்த ரத்னாகரனும் நல்ல திறமையான வேடனாக உருவெடுத்தான். காட்டில் திறமையான வில்லாளனாக வளர்ந்த ரத்னாகரன் வளர்ந்து கட்டிளம் காளையாக இருந்தபோது அவனுக்குத் திருமணம் செய்விக்க வேட்டுவ தம்பதியர் முயற்சியில் ஈடுபட்டனர். மற்றொரு வேட்டுவரின் மகளைப் பார்த்து இவனுக்குத் திருமணம் செய்வித்தனர். சில ஆண்டுகளில் ரத்னாகரன் தம்பதியருக்குச் சில குழந்தைகள் பிறந்தன. அவன் குடும்பம் பெரிதானது. அத்தனை பேருக்கும் உணவும் உடையும் இருக்கையும் தேவை இருந்ததால் அவன் கொள்ளை அடிக்கத் தொடங்கினான். காட்டு வழியில் பயணம் செய்வோரைக் குறிவைத்து வழிப்பறி செய்து வந்தான். ஒரு நாள் ரத்னாகரன் காட்டில் வழிப்போக்கர் யாரும் வருகிறார்களா என்பதை ஒளிந்திருந்து கவனித்து வந்தான் இரத்னாகரன். அந்த நேரத்தில் நாரத முனிவர் தன் வாத்தியத்தை இசைத்துக் கொண்டு ஸ்ரீமன் நாராயணனின் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு அந்த வழியில் வந்தார். அவரை இரத்னாகரன் வழிமறித்தான். தன் கையில் இருந்த தடியை ஓங்கிக் கொண்டு நாரதரிடம் இருப்பதை தந்துவிடு இல்லையேல் உன்னைக் கொன்றுவிடுவேன் என்றான் இரத்னாகரன். தேவலோகத்துக்கும் பூமிக்கும் சர்வ சாதாரணமாக பயணம் செய்யும் நாரதர் இவனைக் கண்டு அஞ்சவில்லை. புன்னகையுடன் நாரதர் இரத்னாகரனைப் பார்த்துச் சொன்னார், "அன்பனே, என்னிடம் இருப்பதெல்லாம் இந்த பழைய வீணை ஒன்றுதான். இடையில் பார், கிழிந்த உடைகள். இவை உனக்குத் தேவை என்றால் எடுத்துக் கொள்" என்றார். திகைத்துப் போன இரத்னாகரன் நாரதரை ஏறிட்டுப் பார்த்தான். அவர் முகத்தில் பயமோ, கோபமோ இல்லை. அமைதியாகக் காணப்பட்டார். இந்த சூழ்நிலையில் இப்படி அமைதி காக்கும் இவர் யார் என்று எண்ணத் தொடங்கினான் இரத்னாகரன். நாரதர் அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்து கொண்டு இசைக்கத் தொடங்கினார். அந்த இசையில் மயங்கி இரத்னாகரன் கீழே அமர்ந்து கேட்டான். இசைத்து முடித்த பின் நாரதர் அவனிடம் சொன்னார், "இளைஞனே! திருடுவது பாவமல்லவா? மிருகங்களைக் கொல்வது அதனினும் மகாபாவமல்லவா. நீ ஏன் இப்படிப்பட்ட பாவச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்?" என்றார். "நான் என்ன செய்வேண் ஐயா! எனக்குப் பெரிய குடும்பம். வயதான பெற்றோர்கள். இப்படி இவர்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டுமே, அவர்களுக்காக அல்லவா நான் இந்தப் பாவச் செயல்களில் ஈடுபட நேர்ந்துவிட்டது. இது பாவம்தான் ஆனால் என்ன செய்வது?" என்றான். புன்னகையுடன் நாரதர் சொன்னார், "அன்பனே! நீ செய்யும் பாவங்களில் பயன்பெறும் உன் குடும்பத்தார் எவரேனும் உன் பாவத்தில் பங்கு பெறுவார்களா, போய் அவர்களிடம் கேட்டுவிட்டு வந்து என்னிடம் சொல்" என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார். இவர் ஏதோ தந்திரம் செய்து என்னை அனுப்பிவிட்டுத் தப்பிக்கப் பார்க்கிறாரோ என்றெண்ணி சந்தேகம் கொண்டு நாரதரைப் பார்த்தான் இரத்னாகரன். இவன் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டு நாரதர் சொன்னார், அன்பா! நான் தப்பி ஓடிவிடுவேன் என்று நீ சந்தேகப்படுவது போல் தெரிகிறது. உனக்கு அப்படி சந்தேகமிருந்தால் என்னை இந்த மரத்தில் கட்டிவைத்துவிட்டுப் போ" என்றார். அதுவும் சரிதான் என்று இரத்னாகரன் நாரதரை அந்த மரத்தில் வைத்து கொடிகளால் கட்டிவிட்டுப் போனான். வீடு சென்ற அவன் தன் தந்தையிடம் சென்று, "அப்பா! நான் வழிப்பறி செய்து வழிப்போக்கர்களிடம் கொள்ளை அடித்து வருகிறேன். இதெல்லாம் உங்களுக்காகத்தான் செய்கிறேன். இது பாவம் என்பது எனக்குப் புரிகிறது. இதனால் எனக்குக் கிடைக்கும் பாவத்தை நீங்களும் பங்கு போட்டுக்கொள்ளத் தயாரா?" என்றான் இரத்னாகரன். தந்தைக்குக் கோபம் வந்தது, அவர் சொன்னார், "பாவங்களை நீ புரிந்துவிட்டு, அதன் பலனை என்னை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறாயா? போ! முட்டாளே, உன் பாவங்களை நான் பங்கிட்டுக் கொள்ள முடியாது. உன் வினைகளின் பலன் உனக்கே ஆகும், போ" என்றார். இதுபோலவே அவன் தன் தாயிடமும், மனைவியிடமும், தன் பிள்ளைகளிடமும் கேட்க அவர்களும் அவன் பாவத்தைப் பங்கிட்டுக் கொள்ள தயாரில்லை எனத் தெரிவித்து விட்டனர். இரத்னாகரனின் அறிவுக்கண்கள் திறந்து கொண்டன. அவரவர் செய்யும் பாவத்துக்கு அவரவர்களே பொறுப்பு என்பதை உணர்ந்து கொண்டான். அதை வேறு எவரும் பங்கிட்டுக் கொள்ளமாட்டார்கள் என்பதையும் புரிந்து கொண்டான். ஓடினான், தான் கட்டிவைத்துவிட்டு வந்த நாரத முனிவரிடம். அவர் கட்டுகளை அவிழ்த்துவிட்டுச் சொன்னான், "முனிவரே, நான் தவறிழைத்துவிட்டேன், நான் செய்த பாவங்களின் பலனை வேறு எவரும் பங்கிட்டுக் கொள்ள மறுத்துவிட்டனர். எனக்கு நல்ல வழிகாட்டுங்கள், உங்கள் திருவடிகளே சரணம்" என்றான் நாரதரிடம். நாரதர் அவனை அன்போடு தூக்கி அரவணைத்துக் கொண்டு சொன்னார், "பயம் கொள்ளாதே இளைஞனே, உன் பாவங்களைக் களைய நான் ஒரு வழி சொல்லுகிறேன், கேள்." என்று சொல்லி ஓரிடத்தில் அமர்ந்து இராம நாமத்தை ஜபம் செய்யச் சொல்லிக் கொடுத்தார். அவனும் ஓர் மரத்தடியில் அமர்ந்து 'ராம' மந்திரத்தைக் கண்மூடி ஜபம் செய்யத் தொடங்கினான். உட்கார்ந்த இடத்தைவிட்டு அசையாமல், ஊண், உறக்கம் இல்லாமல் ராம நாம ஜபத்தில் மூழ்கிக் கிடந்தான் இரத்னாகரன். அப்படி அவன் பல காலம் தவமிருந்த சமயத்தில் அவனைச் சுற்றி கரையான் புற்று ஒன்றை உருவாக்கிவிட்டது. அந்த புற்றினுள் இரத்னாகரன் குரல் மட்டும் 'ராம' நாமம் ஒலிப்பது கேட்டுக் கொண்டிருந்தது. பல ஆண்டுகள் கழித்து நாரத முனிவர் மீண்டும் அந்த வழியில் வந்தார். வழியில் இருந்த கரையான் புற்றிலிருந்து ஜபம் செய்யும் ஒலிமட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. நாரதர் அந்த புற்றின் அருகில் வந்து அவரும் இராம நாமத்தைச் சொல்லியதும் கண்விழித்த இரத்னாகரன் நாரதரை வணங்கினான். அவனுடைய கடுமையான தவத்தைக் கண்டு மகிழ்ந்து நாரதர் அவனுக்கு பிரம்மரிஷி என்று சொல்லி ஆசி வழங்கினார். புற்றினுள் இருந்ததால் அவனை வான்மீகி என்றும் பெயரிட்டு அழைத்தார். அப்படிப்பட்ட வரலாற்றையுடைய வான்மீகி காட்டினுள் கங்கைக் கரையில் ஆசிரமம் வைத்து வாழ்ந்து வரும் போது அவர் ஆசிரமத்துக்கு ராமனும் சீதையும் வந்திருந்து அவர் ஆசியைப் பெற்றுச் சென்றனர். பின்னர் அவர் இராமாயணத்தை இயற்றிய வரலாறும் குறிப்பிடத் தக்கது.

தாய், தந்தை,உற்றார், பெற்றோர், அனைவரும் ஏதோ ஒரு லாபத்திற்க்காக உறவு கொண்டாடுகின்றனர், திருடனாய் இருந்த ரத்னாகரனை வான்மீகியாய் மாற்றிய பெருமை அவரை ஆட்கொண்ட குருநாதர் நாரத முனிவரையே சாரும், அதன் பின் தெய்வம் காட்சி தந்தது, என்னை பொருத்தவரை, குருவே அனைத்திலும் உயர்ந்தவர்,

குரு இல்லையேல் தெய்வமும் இல்லை,

என்னை பொருத்தவரை குரு, தெய்வம், மாதா, பிதா,

மகான் அகத்தீசர் பாதம் பணிவோம்

மகான் செந்திலாண்டவர் பாதம் பணிவோம்

சனி, 12 மார்ச், 2016

மந்திரத்தையும் யந்திரத்தையும் செயல்படுத்தும் திறனே தந்திரம். அலை பாயும் மனதில் எழும் எண்ணங்களை நிறுத்தவில்லை என்றால் அது புலன் வழியாகச் செயல் வடிவம் பெறும். எனவே அதைச் சரி செய்ய வேண்டும். மனம் ஆகிய எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தும் திறன் மந்திரங்களுக்கு உண்டு. மனம் ஒரு நிலைப்பட்டால் அது தவமாகிய செயலாகிவிடும். ஆக மனமாகிய எண்ணம், மந்திரமாகிய சொல், தவமாகிய செயல் மூன்றும் நேர் கோட்டில் வரும் போது யோகம் ஜொலிக்கும். இதை வேறு விதமாகவும் சிந்திக்கலாம். அதாவது மந்திரங்கள் மூன்று வகைப்படும். அதாவது அட்சராந்தக மந்திரங்கள், அட்சராப்ய மந்திரங்கள், பீஜ மந்திரங்கள் எனப்படும். சப்தத்தில் இருந்து மொழி வந்தது, மொழியிலிருந்து மந்திரம் வந்தது. மனதுக்கு திறம் தருவது மந்திரம். அட்சராந்தகம் என்பது எழுத்து இல்லாமல் காலகாலமாக காது விட்டு காது வழி வழியாக வந்து கொண்டிருப்பது. அட்சராப்யம் என்பது எழுத்தில் உள்ளது(சுப்ரபாதம், காயத்ரி போன்றவை). நம் சித்தர்கள் மந்திரம், தந்திரம், யந்திரம், ஔசதம் போன்ற பல வழி முறைகளைச் சாதனையில் வெற்றி பெற கடைபிடித்தார்கள். அஷ்டமகா சித்தி பெற்றார்கள். அவர்கள் நம் ஆதாரச்சக்கரங்களின் மையத்தில் உள்ள பீஜ மந்திரங்கள், அவற்றின் இதழ்களில் ஒலிக்கும் அக்ஷரங்கள் எல்லாவற்றையும் ஞானத்தால் அறிந்து மந்திரங்களை உருவாக்கினார்கள்.

சிலருக்கு இந்த மந்திரங்களை எத்தனை முறை உச்சரிக்க வேண்டும் என்கிற சந்தேகம் வந்து விடுகின்றது. 27 நட்சத்திரங்களுக்கும் தலா 4 பாதங்கள் வீதம் 108 பாதங்களில் இருந்து வரும் சக்திகளை கிரகித்து உடலில் உள்ள ஆறு ஆதாரங்களை நன்றாக இயங்கும் வகையில் தூண்டச் செய்ய 108 முறை உச்சரிக்க வேண்டும். சகஸ்ராரத்தில் உள்ள 1008 இதழ்களில் உள்ள அக்ஷரங்களை தூண்டிவிட்டு எல்லா நாடி, நரம்புகளுக்கும் சக்தி கிடைத்திட 1008 முறை உச்சரிக்க வேண்டும். வாயினால் சொல்வதைவிட மனதுக்குள் பலமாக உச்சரிப்பதே அதிக பலன் தரும். அதுவும் மூச்சை கும்பகம் செய்து சொன்னால் முழு பலனும் கிடைக்கும். ஒரு மந்திரத்தை 5,00,000 முறை உச்சரிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. அதற்கும் சித்தர்கள் ஒரு உபாயத்தை கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது அமாவாசை அன்று ஒரு மந்திரத்தை 1008 முறை உச்சரித்தால் 50,000 முறை உச்சரிப்பதற்குச் சமம். அதுவும் அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் 60,000 முறை உச்சரிப்பதற்குச் சமம. அதைப் போன்று சூரிய கிரகணத்தன்று ஒரு மந்திரத்தை 1008 முறை உச்சரித்தால் 2,00,000 முறை உச்சரித்ததற்குச் சமம். அதவே அன்று ஞாயிற்றுக் கிழமையும், பூச நட்சத்திரமும் கூடி இருந்தால் 2,50,000 லட்சம் முறை உச்சரிப்பதற்குச் சமம். அன்று ஜெபிப்பவர் ஜென்ம நட்சத்திரமாக இருந்தால் 2,60,000 முறை உச்சரிப்பதற்குச் சமம். அதுவே சூரிய கிரகணம் நடை பெறும் போது உத்ராயணமாக இருந்து, ஞாயிற்றுக் கிழமையாகவும் இருந்து, ஜெபிப்பவரின் ஜன்ம நட்சத்திரமாகவும் இருந்தால் 108 முறை உச்சரித்தாலே 5,00,000 முறை உச்சரித்தற்குச் சமம். எவ்வளவு சூட்சுமம் பாருங்கள். இதையெல்லாம் ஞானத்தால் கண்டு பிறர்க்குப் பயன்படும் விதமாக தந்தருளிய சித்தர்களின் திருவடிகளைப் போற்றினால் அது சிவபெருமானின் திருவடிகளைப் போற்றியதற்குச் சமம்.

பீஜம் என்பது நம் உடலோடு அதாவது சக்கரங்களின் மத்தியில் ஓலிக்கும் ஒலியின் சப்தமாகிய மந்திரங்கள். இவை பெரும்பாலும் யந்திரங்கள், சக்கரங்களில் எழுதப்பட்டிருக்கும். யந்திரங்கள் என்கிற போது மண்டலம், யந்திரம் என்று இரண்டு பிரிவு உண்டு. ஆனால் நாம் அந்த இரண்டையுமே யந்திரங்கள் என்று சொல்கிறோம். மண்டலங்கள் என்பது ஆன்ம வரைபடம், அல்லது பேரண்ட வரைபடமாகும். யந்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட தேவதைக்காக, சக்திக்காக, நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுவது. திருமந்திரம் மண்டலங்களைச் சக்கரங்கள் என்று சொல்கிறது. பீஜ மந்திரங்கள் பெரும்பாலும் செப்பு, தங்கம், வெள்ளி போன்ற தகடுகளில் யந்திரங்களாக எழுதி வைக்கப் பட்டிருக்கும். அதிகமாக செப்புதான் பயன்படுத்தப்படும்.
ஏனென்றால் அது ஒரு மின் கடத்தி. மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பே செப்புவின் இந்த ஆற்றலை நம் சித்தர்கள் கண்டு கொண்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அது கடத்துவதோடு தன்னோடு தக்க வைத்துக் கொள்ளவும் வல்லது. பீஜாட்சரம் எழுதிய செப்புத் தகடின் மேல் விளக்கொளி படும் போது, அது மெல்லிய சக்திக்கு ஆட்படுகின்றது. மேலும் இடையறாத மந்திர சப்த அலைகள் அதன் மேல் படும் போது அவைகளை அப்படியே தன் மேல் பதிய வைத்துக் கொள்கிறது. இதைத்தான் உருவேற்றுவது என்பார்கள். முறைப்படி உருவேற்றப்பட்ட செப்புத் தகடானது தன்மேல் பதிந்துள்ள ஒலி மற்றும் ஓளி அலைகளை மின் காந்த அலைகளாக கசிய விட்டுக் கொண்டே இருக்கும். குறிப்பிட்ட காலம் வரை அந்த சக்தி அதில் நிலைத் திருக்கும். நம் பார்வைக்கோ, செவிப் புலன்களுக்கோ அது புலப்படாது. அந்த நுண்ணிய ஒலி மற்றும் ஒளி அலைகளின் மின்காந்த சக்தியானது அந்தத் தகடு இருக்கும் இடத்தில் உள்ளவர்கள் உடம்பில், மனதில் செயல் மாற்றத்தை ஏற்படுத்தும். இப்படி மறைவான இயக்க சக்தியாக இருப்பதால் அதை யந்திரங்கள் என்கிறோம். இதைப் புரிந்து கொள்ளாத வரை அது வெறும் தகடு, கோணல் மாணலாகக் கோடு, எல்லாம் பித்தலாட்டம் என்று சொல்வார்கள். இந்த யந்திரங்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் பூராவுமே உள்ளன. மொத்தத்தில் மந்திரம் பதிவாகி செயல்படும் இடம் யந்திரம். இந்த இரண்டையும் பயன்படுத்தும் திறனே தந்திரம்.

செவ்வாய், 8 மார்ச், 2016

மகான் அகத்தீசருக்கு வணக்கம்

ஒரு சில மனித உறவுகளால் உண்டான தேகத்தை பெயரிட்டு, சோறுட்டி, கொஞ்சி, வளர்ப்பவர்கள் தாய் தகப்பன் அல்ல, அது அக்குழந்தையின் சாரீர சௌக்கியத்தை மட்டும் வளர்ப்பதாகும், எப்போது யார் மூலம் அதன் ஞானக்கண் திறக்கப்படுகிறோதோ அவரே அதன் ஆன்மாவிற்க்கு தாய் மற்றும் அதன் தந்தையாவார், அப்படி எனக்கு கிடைத்த 
குரு மகான் அகத்தீசர்.
முதலில் இகபர சுகங்களுக்காக அவரது நாமத்தை உச்சரித்தேன், பின் அதை விட மிக பெரிய ஆன்ம விழிப்புணர்வு என்னை வழி நடத்தியது.
“மனமது செம்மையானால்”